தென் கைலாயம் என்றழைக்கப்படுகிறது திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.
மேலும், உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக்கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட திரியில் 900 லிட்டர் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, நெய் ஆகியவைகளை ஊற்றி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
அதற்காக மலைக்கோட்டை தாயுமான சுவாமி சன்னதியில் மெகா சைஸ் திரி தயாரிக்கும்பணி கடந்த மூன்றாம் தேதி(03.12.24) தொடங்கி நடைபெற்று வந்தது. பின்னர் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள கார்த்திகை தீப கொப்பரையில் வைக்கப்பட்ட திரியில் 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு ஊறவைத்து, இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது. மலைக்கோட்டை மகா தீபத்தை தரிசித்த பின்னர் திருச்சி மாநகர பகுதி மக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
வீட்டு வாசல்களில் அகல் விளக்கு ஏற்றி சிறுவர் சிறுமிகள் வெடி வெடித்தும் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடினர்.
கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை இத்திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலின் மலை உச்சியில் இன்று ஏற்றப்பட்ட தீபம் வெயில், மழை, காற்று பாராமல் மூன்று நாட்கள் சுடர்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.