சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோ.பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே பகுதியில் பிரேமா என்கிற பிரியா வசித்து வருகிறார். பிரேமா, அவரது கணவர் சந்திரன், பிரேமாவின் தம்பி சேட்டு ஆகிய மூன்று பேரும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் நடிகர் விஜயின், தமிழக வெற்றி கழக கட்சியின் நிர்வாகிகள் என கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கஞ்சா விற்பனை தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
மேலும் ஊர் பொதுமக்கள் சார்பில் பிரேமாவிடம் சென்று இதுபோன்று பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழிக்க கூடாது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வெளியூரிலிருந்து அடியாட்களை வர வைத்து இந்த பிரச்சனையில் தலையீடு செய்பவர்களை அடியாட்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முத்து என்பவர் அதிக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் கூறினர். மேலும, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர்.
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்ற பெயரில் பிரேமா என்கிற பிரியா, அவரது கணவர் சந்திரன், தம்பி சேட்டு ஆகியோர் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், விபச்சாரம் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடுவதால் பெரிய ஆட்களின் துணையோடு ஊர் பொதுமக்களை மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட தலைவர் பிரபாகரனிடம் கேட்டபோது, கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்க கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் இவர்கள் வகித்து வந்த பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், இவர்களுக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இவர்களைப் போலவே பல்வேறு காரணங்களுக்காக அயோத்தியபட்டினம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதி நிர்வாகிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். எனவே, மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கபட்டவர்கள் மீண்டும் கட்சி தொடங்கிய பின் எப்படி இணைந்திருக்க முடியும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு எந்த விதமான பொறுப்பும், பதவியும் தமிழக வெற்றிக் கழகத்தில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றி கழகத்தின் துண்டு அணிந்துள்ள புகைப்படம் யார் வேண்டுமானாலும் அதுபோன்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு ஒருவர் கட்சியில் இணைந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக வெற்றிக் கழகத்தில் தவறு செய்யும் நபர்கள் இருப்பதை கட்சி அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.