Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

38 பார்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருகிறது. நீங்களே மூடாவிட்டால் நான் மூடி கைது செய்து சீல் வைப்பேன். மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அதிரடி எச்சரிக்கை

0

'- Advertisement -

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் 38 பார்களுக்கும் சீல் வைத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கடந்த நவம்பர் 21-ம் தேதி பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பொறுப்பேற்ற ஒரேநாளில் சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தார்.

இதில் தொடர்புடைய பெண்கள் 3 பேர் உள்பட 12 பேரில் 3 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளி மாநில மது, சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த சோதனை தொடரும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அதனை கைவிட்டு, திருந்தி வாழ வேண்டும் என டிஎஸ்பி சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை நகரில் வெளிமாநில மதுபாட்டில்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற சுந்தரேசன் மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கு காலை 9.30 மணியளவில் சென்று, அங்கு வெளிமாநில மது பாட்டில்கள் அல்லது போலி மதுபான பாட்டில்கள் உள்ளதா? என்று அவர் சோதனை மேற்கொண்டார்

பின்னர் அங்கு இயங்கி வந்த மதுபானக் கூடத்தை (பார்) காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் ஆய்வு செய்தார். அப்போது உரிமம் பெறாமல் மதுபானக்கூடம் (பார்) நடத்தப்படுவதை கண்டறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் அந்த மதுபானக்கூடத்தை மூடி சீல் வைத்தார். மேலும் அங்கு வேலை செய்து வந்த 52 வயதான செந்தில் மற்றும் 55 வயதான முருகன் ஆகிய 2 பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் நிலையில், அவற்றில் 38 கடைகளில் மதுபானக் கூடங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாகவும், அவற்றை உடனடியாக மூடவேண்டும், மூடாவிட்டால் கைது மற்றும் பார்களை சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.