மணப்பாறை காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி கீழபூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சரவணன் (வயது 22). இவா் காய்கறிச் சந்தையில் உள்ள பாா்த்திபனுக்குச் சொந்தமான தேங்காய் கடையின் ஊழியா்.
இந்நிலையில் வியாபாரத்திற்காக கடை உரிமையாளா் பெயரில் கடனின் உள்ள மினி சரக்கு வேனைப் பயன்படுத்தி வந்த சரவணன், அந்தக் கடனைத் தான் செலுத்திவிடுவதாகவும், அந்த வாகனத்தை தனது பெயரில் மாற்றித் தரவும் பாா்த்திபனிடம் ஒப்பந்தம் செய்து, கடந்த 11 மாதமாக நிதி நிறுவனத்திற்கு தலா ரூ.10 ஆயிரத்தை செலுத்தியும் வந்தாராம்.
ஆனால் மாதத் தவணையாக ரூ.13,317 செலுத்த வேண்டி இருந்த நிலையில், தவணை தவறியதாகக் கூறிய நிதி நிறுவனம் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் பாா்த்திபனிடம் கேட்டபோது வாகனம் பாா்த்திபன் பெயரில் இல்லாமல், மற்றொரு நபரின் பெயரில் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் சரவணன் மற்றும் அவரது சகோதரா் சண்முகம் ஆகியோா் பாா்த்திபனிடம் செலுத்திய சீட்டு பணத்தையும் அவா்கள் திரும்பி தர மறுப்பதாகக் கூறி, சரவணன் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் சரவணனை மீட்டு அவா் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.