நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத நடிகர் விஜய் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்குவார் என நம்புகிறோம். திருச்சி மநீம மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார்
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
உண்மையிலேயே மாற்று அரசியலை தான் முன்னெடுக்கிறார் நடிகர் விஜய்.
கடந்த 2011ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் அமோக வெற்றி பெற்ற மரியம்பிச்சை அவர்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் கொடுத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அமைச்சராக பொறுப்பேற்க சென்னை செல்லும் வழியில் திருச்சி பாடாலூரில் நடைபெற்ற கோர விபத்தில் பலியானார் மரியம்பிச்சை.
சமய சடங்குகளிலும் கடவுள் நம்பிக்கையிலும் அதித பற்று கொண்ட முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2006-2011 ம் ஆண்டு ஆட்சியை இழந்து 2011ம் ஆண்டு புதிதாக பதிவியேற்ற பிறகும் மரியம்பிச்சையின் பூதஉடலுக்கு நேரில் திருச்சி வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், மேற்படி விபத்து தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் என்பது வரலாறு.
ஆனால் மாற்று அரசியலை கையிலெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களுக்காக எப்படியெல்லாம் திருச்சி மாவட்டத்தில் மறைந்த வழக்கறிஞர்.V.L.ஸ்ரீநிவாசன் மற்றும் சகோதரர் உறையூர் கலை உழைத்தார்கள் என்பது ஊரறிந்தது. அப்பேற்பட்டவர்களின் இழப்பு த.வெ.க கட்சி சாராத எங்களை போன்றோருக்கே பேரதிர்ச்சியாக உள்ளது. ஆனால் இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டும் சுயநலத்துடன் விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமலும் தம்பிகளின் பூத உடலுக்கு கூட நேரில் அஞ்சலி செலுத்தாத இவரா எம்ஜிஆரை போல விஜயகாந்தை போல மக்கள் தொண்டாற்ற போகிறார். மாற்று அரசியலை மேற்கொள்ள போகிறார் என வெகுஜன மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கட்சி தொடங்கி நடந்த முதல் மாநாட்டில் அவர் பேசிய பேச்சு எனக்கு இன்னும் நியாபகம் உள்ளது. ஒவ்வொரு தொண்டனும் ஜாக்கிரதையா வீட்டுக்கு போகனும். கடைகள் எல்லாம் இருக்காது. நீங்க பசியாயிருக்க கூடாதுனு சாப்பாட்ட பார்சல் செய்து கொடுத்திருக்கேன். நான் விடிய விடிய தூங்கமாட்டேன். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிக்கும் போன் போட்டு கேட்டுட்டேயிருப்பேன் என அன்பு மழை பொழிந்தார் மறைந்த கேப்டன்.
இதெல்லாம் உதாரணம் தான் விஜய் சார். இந்த விமர்சனம், ஆதாங்கம் எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டது விஜய் சார். ஏனெனில் நாங்கள் மறைந்த இரண்டு அன்பு தம்பிகளின் குடும்பத்தையும், குழந்தைகளின் எதிர்காலத்தை ஆராய்கிறோம், அக்கரைப்படுகிறோம். எங்களுள் இருந்த தம்பிகளை இழந்துவிட்டதாக வேதனைபடுகிறோம்.
இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனால் நல்ல மனமிருந்தால் இழப்பீடு வழங்கலாம்.
எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் “க்” விடுபட்டதை சுட்டிடிகாட்டியதுடன் உடனடியாக திருத்திய விஜய். அன்பு தம்பிகளின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம் என வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .