Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணி திரில் வெற்றி

0

'- Advertisement -

 

பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில், பாகிஸ்தான் அணி வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.

ஏசிசி வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்து இந்தியா ஏ அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது.

பொறுப்புடன் ஆடிய கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் விளாசினர். இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் முகமது ஹாரிஸ் – யாசிர் கான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் அன்சுல் கம்போஜ் முதல் ஓவரை வீச அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே கேப்டன் ஹாரிஸ் சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார்.

ஆனால் 2வது பந்திலேயே ஹாரிஸை போல்டாக்கி அன்சுல் கம்போஜ் தரமான பதிலடியை கொடுத்தார். பின்னர் யாசிர் கான் – உமைர் யூசுப் கூட்டணி இணைந்தது. இதில் யாசிர் கான் அதிரடியாக விளையாட, வைபவ் அரோரா வீசிய 2வது ஓவரிலேயே 13 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் 3வது ஓவரில் உம்ரைன் யூசுப் 2 ரன்னில் ஆட்டமிழக்க, யாசிர் கான் – காசிம் அக்ரம் கூட்டணி பொறுப்புடன் விளையாடியது.

தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசிய இவர்கள், 6 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை 69 ரன்களாக உயர்த்தினர். பின்னர் ராகுல் சஹர் பவுலிங்கில் யாசிர் கான் அதிரடியாக சிக்சரை அடிக்க, ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கைகள் ஓங்கியது. அப்போது 9வது ஓவரை வீசுவதற்கு நிஷாந்த் சிந்து அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே அதிரடி வீரர் யாசிர் கான் 33 ரன்களிலும், 5வது பந்தில் காசிம் அக்ரம் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 9 ஓவர்களில் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஹைதர் அலி – அராஃபத் கூட்டணி இணைந்து நிதானமாக ஆடியது. ஆனால் 14வது ஓவரை வீசுவதற்கு கேப்டன் திலக் வர்மா வந்தார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் ஹைதர் அலி 9 ரன்களில் வெளியேற, தொடர்ந்து வந்த அப்துல் சமத் எதிர்பாராத வகையில் பொளந்து கட்டினார்.

ரஷிக் சலாம் மற்றும் வைபவ் அரோரா பவுலிங்கில் அடுத்தடுத்து சிக்சரும், பவுண்டரியுமாய் வெளுத்து கட்ட, பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது வைபவ் அரோரா வீசிய 18வது ஓவரில் 8 ரன்களும், ரஷிக் சலாம் வீசிய 19வது ஓவரில் 7 ரன்களும் சேர்க்கப்பட்டன. இதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது.

இந்த நிலையில் முதல் பந்திலேயே அதிரடி வீரர் சமத் 25 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், ரஷிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.