திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்விப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சகமானது தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டத்தை தொடங்கும் அனுமதியை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் வழங்கியது. இதன் தொடா்ச்சியாக, தேசிய ஆசிரியா் கல்வி நிறுவனத்தின் தென்மண்டலக் குழு திருச்சி என்ஐடியில் ஒருங்கிணைந்த ஆசிரியா் பயிற்சிக்கு 50 இடங்கள் அளவில் இளங்கலை பிரிவில் மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்கியது.
இதையடுத்து தேசிய பொது நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 2024-2025 கல்வியாண்டுக்கான ஆசிரியா் பயிற்சி திட்டக் கல்வி பயில அனுமதிக்கப்பட்டனா். அதன்படி நிகழாண்டு 36 மாணவ, மாணவிகள் இப் படிப்பில் சோ்ந்துள்ளனா். இதையடுத்து ஒருங்கிணைந்த ஆசிரியா் பயிற்சி படிப்பை என்ஐடி வளாகத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதில் திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா, ஒருங்கிணைந்த ஆசிரியா் பயிற்சி படிப்பு திட்ட (ஐடிஇபி) தலைவா் சி. வேல்மதி, கல்வி புலத் தலைவா் எஸ்.டி. ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டு பி.எஸ்சி. பட்டப்படிப்பும், நான்காண்டு பி.எஸ்சி., பி.எட். பட்டப்படிப்பும் உள்ளன. தேவையெனில் நான்காண்டுகளும், பட்டப்படிப்பு மட்டும் போதும் எனில் மூன்றாண்டுகளும் பயிலலாம். இதற்கு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களைக் கொண்ட பிரிவில் பிளஸ் 2 முடித்த, தேசிய பொது நுழைவுத் தோ்வில் தோ்ச்சியடைந்த மாணவா்கள் விண்ணப்பித்து சேரலாம் என என்ஐடி பேராசிரியா்கள் தெரிவித்தனா்.