Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சுங்க சாவடி முற்றுகை போராட்டத்தில் சுங்க சாவடி கண்ணாடி, சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிய பரனூர்,திருச்சி மனிதநேய மக்கள் கட்சியினர் .

0

'- Advertisement -

 

திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் நடத்திய சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் சுங்கச்சாவடி கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

டோல்கேட் சூறையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காலாவதியான சுங்கச் சாவடிகளை உடனடியாக மூட வேண்டும், தமிழ்நாட்டில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்பட வேண்டும், புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கக்கூடாது, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய 7 சுங்கச்சாவடிகளில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பரனூர் சுங்கச்சாவடி மையத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் காரணமாக இந்த வழியாக சென்ற வாகனங்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல, திருச்சி – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் ம.ம.க எம்.எல்.ஏ அப்துல் சமது தலைமையில் சுமார் 700க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய மக்கள் கட்சியினர் சுங்க சாவடி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து கற்களை வீசி தாக்கியும், கையில் கிடைத்ததை வைத்தும் அங்குள்ள கண்ணாடிகள், சிசிடிவி கேமராக்கள், தடுப்புகளை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கட்சிநிர்வாகிகளும் போலீசாரும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 400க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை கனியூர் பகுதியிலும், மதுரை கப்பலூர் சுங்க சாவடி உள்ளிட்ட சுங்கச் சாவடியிலும் மனித நேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.