தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பொதுவாக திருச்சி-காரைக்கால் ரயில் வழியாக சென்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இன்று சனிக்கிழமை என்பதால், பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த நிலையில், திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் பயணிகள் ரெயில் இன்று காலை 8.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவெறும்பூர் ரெயில் நிலையம் வந்த ரெயிலில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது, ரயிலின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால், டிரைவர் உடனடியாக ரயிலில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டார்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தை அடுத்து பயணிகள் அனைவரும் பின்னர் வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் பயணத்தை தொடர்ந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.