Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எஸ் பி வருண்குமாரின் மனைவியும் புதுக்கோட்டை எஸ் பியுமான வந்திதா பாண்டேக்கு கனிமொழி எம்பி ஆதரவு .

0

 

திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவை ஆபாசமாக சித்தரித்ததாக நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழி செயல் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

திருச்சி எஸ்பி நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியினை பழிவாங்குவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் கூறியிருந்தார்.

மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதால் எக்ஸ் தளத்திலிருந்து தானும் தனது மனைவியும் விலகுவதாக அறிவித்தார் வருண்குமார். மேலும் தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினர் என அனைவரையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சுமார் 50 பேரின் பட்டியலை பகிர்ந்த அவர் இது தொடர்பாக யாரையும் விடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சமூக வலைதளத்தில் பேசும் இணையதள கூலிப்படையினர் மற்றும் அவர்களை தூண்டிவிடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் வருண்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே தன் மீது 130க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 வழக்குகளாக மாற்ற வேண்டாம்.. எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் தான் அதை குப்பை தொட்டியில் தான் வீசுவேன் என தெரிவித்திருந்தார்.

மேலும் திமுகவின் ஐடி விங் நிர்வாகி போல வருண்குமார் செயல்படுவதாகவும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் நேருக்கு நேர் மோத வேண்டும் என சவால் விடுத்தார். அதற்கு பதில் அளித்துள்ள வருண்குமார் ஐபிஎஸ்,”திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ தனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. தான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா? ” என கேட்டிருந்தார். இப்படியாக இருவரிடையே மோதல் தொடர்ந்து வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர் குறித்து சமூக வலை தளத்தில் ஆபாசமாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியினரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 5 பேர் கைதாகியுள்ள நிலையில், கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆபாச சித்தரிப்புகள் காரணமாக வருண்குமாரும், அவரது மனைவியும் எக்ஸ் தளத்தில் இருந்து விலகினர். இந்நிலையில் வந்திதா பாண்டே ஐபிஎஸ்க்கு தனது ஆதரவை திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் திருமிகு. வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.