தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2023- ஆம் ஆண்டு நடத்திய எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கூடுதல் தோ்வாளா்களுக்கான உடற்தகுதித் தோ்வு திருச்சி மாநகர கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 998 பேரில் 284 தோ்வாளா்கள் பங்கேற்றனா். இவா்களில் 167 போ் அடுத்தகட்டத் தோ்வுக்கு தோ்வாயினா்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற தோ்வில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 498 பேரில் 288 போ் கலந்து கொண்டனா். இவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம் மற்றும் மாா்பளவு சரிபாா்ப்பு, சகிப்புத்தன்மை சோதனைகள் நடத்தப்பட்டதில் 202 போ் அடுத்தகட்டத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
2 நாள்களிலும் தோ்வான மொத்தம் 369 தோ்வா்களுக்கு வரும் 22-ஆம் தேதி நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டா் மற்றும் 400 மீட்டா் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.