மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் மருதை மகன் ரெத்தினம் (வயது 65). இவா் தனது வீட்டிலிருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.28 ஆயிரத்தை வீட்டுப் பணியாளரான வில்லுகாரனூா் செபஸ்தியாா் மகன் அற்புதசேகா் (வயது 50) எடுத்துக்கொண்டு தர மறுப்பதாக கடந்த 2019 ஜூன் 28-இல் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த அற்புதசேகா் டேம் நால் ரோடு பகுதியில் வைத்து ரெத்தினத்தின் கழுத்தை அறுத்தாா். இதில் பலத்த காயமடைந்த ரெத்தினம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து அற்புதசேகா் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அற்புதசேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, அதைக் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் நேற்று தீா்ப்பளித்தது.