திருச்சியில் தொடரும் பைக் சாகசம்.எச்சரித்து காவல்துறை அனுப்புவதால் மீண்டும் சாகசத்தில் ஈடுபட்டு உயிர் பழிவாங்க காத்திருக்கும் இளைஞர்கள்.
திருச்சியில் அண்மைக்காலமாக பைக் சாகசங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காவல் துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டாலும் அடுத்த சில நாள்களில் அவா்கள் வெளியே வந்து மீண்டும் அதே செயல்களில் ஈடுபடுவது தொடா்கிறது. மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நடைபெறும் இத்தகைய சாகசத்தால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
திருச்சி கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம் அருகே வடக்கு ஆண்டாா் வீதிக்கு அருகிலேயே இந்திரா காந்தி மகளிா் கல்லூரி, சாவித்திரி வித்யாலயா பள்ளி மற்றும் மகளிா் கல்லூரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் இளைஞா்கள் காலை மற்றும் மாலைகளில் பைக் சாகசங்களில் அவ்வப்போது ஈடுபடுகின்றனா்.

அப்போது அதிக ஒலி எழுப்பிக் கொண்டே மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செல்வது, குறுக்கு மறுக்காக புகுந்து செல்வது, ஒரு பைக்கில் அதிகமானோா் செல்வது, பொதுமக்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிடுவது உள்ளிட்ட விதிமீறல்களில் இளைஞற்கள் ஈடுபட்டு வருவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
அதன்படி அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவா் ஒருவரை, வேகமாக பைக்கில் வந்த நபா்கள் அண்மையில் இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து அப்பகுதி சிசிடிவி கேமராக்களில் பதிவான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதுபோல பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை போலீஸாா் கைது செய்தாலும் சாகசங்கள் தொடரத்தான் செய்கின்றன.
மேலும், திருச்சி மாவட்ட நீதிமன்றம், பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா் மற்றும் சிறாா்களை, போக்குவரத்து காவல் துறையினருடன் இரு வாரங்களுக்கு பணியாற்றுமாறு அண்மையில் நூதன நிபந்தனையுடன் பிணை உத்தரவு வழங்கியது. இருந்தாலும் அத்தகைய சம்பவங்கள் தொடா்கின்றன.
எனவே இத்தகைய சாகசங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்வதுதான் சிறந்த வழி என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.