காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில்
கல்வி வளர்ச்சி நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்வி மேம்பாட்டிற்குப் பெரிதும் உழைத்து மேம்பட்ட சமுதாயம் உருவாக அடித்தளம் இட்டவர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள்.
அவரின் அப்பழுக்கற்ற அரசியல் நேர்மை,தியாகம்,
தன்னலமற்ற சேவை சமுதாயப்பணி ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் விதமாகப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை ,ஓவியம், பாடல் ஒப்புவித்தல் போன்ற பல தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கமாகப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தி. கீதா விழாவினை ஒருங்கிணைத்து சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் தண்டபாணி ,
சித்ரா ,நிர்மலா, சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தேவ சுந்தரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
கல்விப் புரட்சிக்கு பெரிதும் வித்திட்டு கல்விக்கண் திறந்தவராக எல்லோராலும் போற்றப்படும் காமராசர் அவர்களின் பெருமைகளை மாணவர்கள் அறியும் வண்ணம் கொண்டாடப்பட்ட இவ்விழாவைப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், பள்ளி மேலாண்மைக் குழுவினரும், ஊர்ப் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.