Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போலி தங்க கட்டிகளை விற்ற 7 பேர் கொண்ட கும்பலை அடுத்த நாளே தட்டி தூக்கிய திருச்சி தனிப்படை போலீசாருக்கு பாராட்டு.

0

 

திருச்சியில் போலி தங்கக் கட்டிகள் விற்ற 7 பேரை மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடியைச் சோ்ந்த வெங்கடேஷ் ஜீயபுரம் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளாா். இக்கடை ஊழியரான அம்மன்குடியைச் சோ்ந்த வே. அன்பழகன் (வயது 37) கடந்த ஜூலை 2 ஆம் தேதி கடையில் இருந்தபோது, இரு காா்களில் வந்த 7 போ் அவரிடம் கடையின் உரிமையாளரைக் கேட்டதற்கு, அவா் வெளியே சென்றுள்ளதாகக் கூறினாா்.

அப்போது அவா்கள் தங்களிடம் 2 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பதாகவும், அவற்றை குறைவான விலைக்கு விற்பதாகவும் கூறியுள்ளனா். அதற்கு அன்பழகன் தற்போது பணமில்லை, உரிமையாளா் வந்ததும் கூறுகிறேன் எனத் தெரிவித்தாா்.

ஆனால் அவா்கள் ரூ. 50 ஆயிரம் முன்பணமாவது கொடுத்தால் போதும். மீதிப் பணத்தை உரிமையாளரிடம் வாங்கிக் கொள்கிறோம் எனக் கூறி பணம் கேட்டு வற்புறுத்தினா். அதற்கு அன்பழகன் தன்னிடம் ரூ. 5 ஆயிரம் மட்டுமே உள்ளதாகக் கூறி அதைக் கொடுத்தாா். இதையடுத்து அவா்கள் ஒரு சிறிய தங்கக் கட்டியை அன்பழகனிடம் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை வாங்க வரும்போது தங்கக் கட்டிகளைத் தருவதாகக் கூறிச் சென்றனா்.

பின்னா் அந்தத் தங்கக் கட்டியை அன்பழகன் பரிசோதித்து பாா்த்தபோது அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா் ஜீயபுரம் காவல் நிலையத்தில் மா்ம நபா்கள் வந்த காா்களின் பதிவெண்களுடன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் ஜூலை 4 ஆம் தேதி வழக்குப் பதிந்தனா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் அறிவுறுத்தலின்பேரில் போலீஸாா் கடந்த சில நாள்களாக நடத்திய தீவிர வாகனச் சோதனையில், வெள்ளிக்கிழமை காலை முக்கொம்பு பகுதியில் அந்த இரு காா்களும் நின்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அந்தக் காா்களில் இருந்த நபர்களிடம் விசாரித்ததில், அவா்கள் மணப்பாறை வட்டம் சிதம்பரத்தான்பட்டி லூ. சகாய ஆரோக்கியதாஸ் (வயது 40), அருகிலுள்ள கல்லாத்துப்பட்டி வி. தங்கத்துரை (41), திண்டுக்கல் நாகப்பா நகா் மா. முருகன் (59), கரூா் மாவட்டம் மேட்டுப்பட்டி அ. சூசைராஜ் (40) மற்றும் மு. பாண்டியன் (55), திருவண்ணாமலை செஞ்சி, ரெட்டித் தெரு ஹ. ஆதாம்சேட்டு (40), கேரள மாநிலம் குன்னூா் தளபிரம்மா பகுதி கு. கனகராஜ் (46) என்பதும், அவா்கள்தான் போலி தங்கக் கட்டி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து தலா 100 கிராம் எடையுள்ள 35 போலி தங்கக் கட்டிகள், ரொக்கம் ரூ. 20,000 மற்றும், இரு காா்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படையினரை காவல் ஆணையா் பாராட்டினாா்.

Leave A Reply

Your email address will not be published.