Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் சுமார் 30% மரணங்கள் மது பழக்கத்தால் வருகிறது. திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ மாநில செயற்குழு கூட்டத்தில் நெல்லை முபாரக் .

0

 

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள் இலியாஸ் தும்பே, அப்துல் மஜீத் பைஸி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.

மேலும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் அஹமது நவவி, நிஜாம் முஹைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபூபக்கர் சித்தீக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், எஸ்டிபிஐ கட்சியின் தேசியம் முதல் மாநிலம், மாவட்டம், தொகுதி, நகர மற்றும் கிளை வரையிலான அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல் ஜனநாயக அடிப்படையில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பான ஆலோசனையும் நடைபெற்றது.

தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது;-

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். இன்னும் ஏராளமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கத் தவறியது திமுகவின் நிர்வாகத் தோல்வியையும், காவல்துறையின் செயல்படாத நிலையையும், கள்ளச்சாராய கும்பலுக்கு ஆதரவான காவல்துறையில் உள்ளவர்களின் போக்கையுமே காட்டுகிறது. ஏனெனில், காவல் நிலையத்திற்கு பின்புறமாக, கலெக்டர் அலுவலகத்திற்கு ஒன்றரை கீ.மீ தூரத்தில் தான், நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையும் உயிரிழப்புகளும் நடந்துள்ளன. இதுவே அந்த குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக உள்ளன. பிடிபட்ட கள்ளச்சாராய வியாபாரி பலமுறை இதே குற்றத்திற்காக சிறை சென்றுள்ளார். தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டு வந்தவரை காவல்துறை கண்காணிக்கத் தவறியுள்ளது; அல்லது காவல்துறை துணை போயுள்ளது என நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். சுமார் 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த போதும் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. மட்டுமின்றி சட்டமன்றத்திலும் விவாதிக்கவில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

கள்ளச்சாராய விற்பனை கள்ளக்குறிச்சியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் சிஸ்டமேட்டிக்காக நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. அதிகார வர்க்கத்தினரின் துணையின்றி இது சாத்தியமில்லை. சென்ற ஆண்டு மரக்காணத்தில் கள்ளச் சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த மரண நிகழ்வை எச்சரிக்கையாக உணர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் இன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரண நிகழ்வுக்கு முக்கிய காரணம்.

கள்ள சாராயத்தை தடுக்க காவல்துறையில் தனியாக மதுவிலக்கு சிறப்பு பிரிவும், அதற்குரிய அதிகாரிகளும், காவலர்களும் இருந்த போதும், தொடரும் கள்ளச்சாராய விற்பனையானது அந்த பிரிவின் செயல்பாட்டை கேள்விக்குட்படுத்துகிறது. ஆகவே, கள்ளச்சாராய மரணத்தை அரசு சாதாரணமாக கடந்து சென்று விடாமல், தொடர்புடைய அனைவரின் மீதும், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மது குடிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடிச் செல்ல அரசின் டாஸ்மாக் மதுவிற்பனையும் காரணமாகும். அரசின் டாஸ்மாக் மூலம் மது பழக்கத்திற்கு ஆளானவர்கள் குறைந்த விலை மதுவை நாடியே கள்ளச்சாராயம் போன்றவற்றை நாடிச் சென்று இதுபோன்ற உயிரிழக்கும் நிலைக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது. கள்ளச்சாராய மரணத்தை விட அரசின் டாஸ்மாக் மதுவாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. மதுப் பழக்கத்தால் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது தேசிய அளவைவிட அதிகமாக உள்ளது. சுமார் 30 சதவீத மரணங்கள் மதுப்பழக்கத்தால் ஏற்படும் உபாதைகளால் ஏற்படுபவை. அதேபோல் பல குற்றச் செயல்களும் மதுபோதையால் ஏற்படுபவையாக உள்ளன. ஆகவே தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மதுவால் ஏற்படும் குற்றச்செயல்களையும், பாதிப்புகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும்,

இந்திய விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு குறித்தும், சமூகத்தை மேம்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் அறிய சாதிவாரி கணக்கெடுப்பு முறையே ஆதாரமாகும் என்பதால், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

1931 ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மண்டல் கமிஷன் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், சுதந்திரத்திற்கு பின்னால் சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் எடுக்கப்படாத காரணத்தால், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தரவு இல்லாத நிலையில், தேவையான தகவல் பற்றாக்குறையுடன் தான் மண்டல் கமிஷனின் அறிக்கைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இடஒதுக்கீடு திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரம் ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பதால், அதனை ஒன்றிய அரசுதான் செய்ய முடியும் என்று தமிழக அரசு கூறிவரும் நிலையில் தான், பீகார் மாநில அரசு பல்வேறு எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிந்து, நாட்டிலேயே முதன்முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெலுங்கானா, ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

2008 ஆம் ஆண்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்கிறபோது, சமூகநீதி மாநிலமான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து, ஒன்றிய அரசின் பக்கம் தள்ளிவிட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசின் இந்த செயல் ஏற்புடையதல்ல. நீட் விலக்கு தீர்மானம், முல்லைப் பெரியாறுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட ஒன்றிய அரசை வலியுறுத்தும் தமிழக சட்டமன்றத் தீர்மானங்கள் எல்லாம் ஒன்றிய அரசால் கண்டுகொள்ளப்படாத நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்து, சமூகநீதியின் அடையாளமாக விளங்கும் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் உள்ளிட்ட ஒவ்வொரு சாதியினரின் பலத்தை சரியாக கணக்கீடு செய்து, அதன்மூலம் அவர்களுக்கு உரிய மற்றும் போதுமான பிரதிநிதித்துவம், அந்தந்த மக்கள் தொகையின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப உறுதி செய்யப்படுவதுடன், அனைத்து சமூக மக்களுக்கும் அர்த்தமுள்ள சமூக மற்றும் அரசியல் நீதி வழங்கப்பட வேண்டும்,

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்கான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 99 ஆண்டு குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், தொழிலாளர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற நிர்பந்தபடுத்தப் பட்டுள்ளனர். 4 தலைமுறைகளாக தொழிலாளர்கள் அங்கு குடியிருந்து தேயிலை தோட்டத் தொழிலை செய்து வந்த நிலையில், குத்தகைய காலம் முடிவடைய உள்ளதால், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தொழிலாளார்களிடம் கட்டாய ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுள்ளது. இதனால் தினக்கூலியாக நான்கு தலைமுறைகளாக உழைத்தவர்கள் மாஞ்சோலையை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உழைப்பில் 14 கம்பெனிகளை நடத்திவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படாமல், மிகவும் குறைந்த இழப்பீடு தொகையை கொடுத்து அவர்களை எஸ்டேட்டிலிருந்து வெளியேற்றுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது. ஆனால், தொழிலாளர்கள் விருப்பத்துடன் வெளியேறுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தங்களுக்கு தேயிலை தோட்டத் தொழிலை தவிர்த்து வேறு எந்த தொழிலும் தெரியாததாலும், நான்கு தலைமுறைகளாக இப்பகுதியிலேயே வாழ்ந்து வருவதாலும், தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசே தேயிலைத் தோட்டத் தொழிலை ஏற்று நடத்த வேண்டும் என மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாஞ்சோலையிலேயே பிறந்து வளர்ந்து கணவனை, பிள்ளைகளை இழந்து தவிக்கும் பல பெண்களும் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமே தேயிலை பறிக்கும் தொழிலாகவே இருக்கின்றது. இப்படியிருக்கும் சூழலில் அவர்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதோடு, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தேயிலை தோட்டத் தொழிலை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக சட்டமன்ற கூட்டம் ஆண்டுக்கு 180 நாட்கள் நடைபெறும் என ஆளும் அரசால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுபோல் நடைபெறவில்லை. கூட்டத்தொடர் பெரும்பாலும் அவசரகதியிலேயே நடைபெற்று வருகின்றது. மக்கள் பிரச்சினைகள் குறித்து முழுமையாக விவாதிக்க உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. மக்கள் பிரச்சினைகளை முறையான ஜனநாயக அடிப்படையில் பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில் அவர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அதிதீவிரமான பிரச்சினையைப் பற்றி விவாதிக்கக் கூட அனுமதிக்க மறுக்கும் நிலை என்பது கவலைக்குரியது. அதேப்போல் மக்கள் பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை உதாசீனப்படுத்துவது போன்று நக்கல் செய்யும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே சமூகநீதி பேசும் அரசு, சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் சரியான முறையில் கேள்விகளை எழுப்ப அனுமதிப்பதும், அதற்கு பதிலளிப்பதுமான தேவை இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் தகுதியை மதிப்பிடவும், மருத்துவக் கல்வியை வணிகமயமாக்குவதை தடுக்கவுமே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடவடிக்கைகளில் ஏற்படும் குளறுபடிகளும், முறைகேடுகளும் அதனை கேள்விக்குட்படுத்துகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கு தடையின்றி பணம் பெற்று கொழுப்பதற்கும், கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் கல்வி வணிகர்கள் கோடிகளை கல்லா கட்டவுமே நீட் தேர்வு உதவி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் அதனை வெளிச்சமாக்குகின்றன.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என துவக்கம் முதலே எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து கூறிவருகின்றது. நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களின் நம்பிக்கை மற்றும் கனவை தகர்த்துள்ளது. தரம் என்கிற பெயரில் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் கொலை ஆயுதமாகவும், ஏழை நடுத்தர மக்களின் உழைப்பை தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் உறிஞ்சி குடிக்கும் ஆக்டோபஸ் கரங்களாகவும் நீட் தேர்வு உள்ளது. மருத்துவக் கல்வியை வசதிபடைத்த மேல்தட்டு வர்க்கம் மட்டுமே கற்றுக்கொள்ளவும், அதனை கார்ப்பரேட் மயமாக்கும் யுக்தியாகவே நீட் கொண்டுவரப்பட்டுள்ளது. நீட்டின் மூலம் தரம் என்ற பெயரில், உயர் கட்டணங்கள் வழியாக தனிப் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி, வசதிபடைத்த ஒரு சாரார் மருத்துவ கல்லூரிகளில் நுழைகின்றனர். அதேவேளையில் வசதியற்ற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில தகுதி அற்றவர்கள் என துரத்தியடிக்கப்படுகின்றனர். இதிலும் மத்திய அரசின் கார்ப்பரேட் நலனே உள்ளதே தவிர, சிறிதும் ஏழை-எளிய மாணவர்களின் நலன் என்பது அறவே இல்லை.

ஆகவே, ஏழை எளிய கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை தகர்க்கும் நீட் எனும் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்திட வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற தீர்மானத்துடன் நிறுத்திவிடாமல், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் விரைந்து நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பைப் பெற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் கல்விக்கான மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீடை தடுத்து நிறுத்தவும், கல்வியை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சிக்கு எதிராகவும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, ஆமை வேகத்தில் செயல்பட்டுவரும் மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழுவை வேகப்படுத்தி விரைவில் மாநில கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும்

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் ஏறக்குறைய 5 லட்சம் வரை காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், 2026க்குள் சுமார் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்கிற அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. கடந்த ஆண்டு சுதந்திரதின உரையின் போது, நடப்பு ஆண்டில் பல்வேறு துறைகளைச்‌ சேர்ந்த 55 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் சுமார் 65 ஆயிரம் பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என முதல்வரின் அறிக்கை மூலம் தெரியவருகின்றது.

3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கும் போதே, இரண்டு இலட்சம்‌ பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்‌ என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்து காலிப் பணியிடங்களும் அதிகரித்துவிட்ட நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில்‌ உள்ள பல்வேறு அரசுத்‌ துறைகளில்‌ 30-50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட பணியிடங்கள்‌ காலியாக உள்ளன. பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளில்‌ ஆசிரியர்கள், பேராசிரியர்கள்‌ பற்றாக்குறை நிலவுகிறது. பல அரசுப் பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் மாதந்தோறும் பணம் கட்டி டியூசன் செண்டர்களில் படிக்கும் நிலை உள்ளது. பல பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை காணப்படுகின்றது. இதேபோல் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும்‌ காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக பணியாட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆட்கள் பற்றாக்குறையை கொண்டு அரசுத் துறைகளை செயல்படுத்துவதால் மக்களுக்கு உரிய பலன் சென்றடையாது. ஆகவே, தமிழக அரசு லட்சக்கணக்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக சில ஆயிரம் பணியிடங்களை அறிவிப்பு செய்துவிட்டு ஒதுங்கிவிடக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.