சிவகாசி திருத்தங்கல், பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி பழனியம்மாள், மற்றொரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதிக்கு ஆனந்தவல்லி (வயது 28), ஆதித்யா என இரண்டு பிள்ளைகள் உண்டு. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பழனியம்மாளின் முதல் கணவர் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து மகள் ஆனந்தவல்லியுடன் தனியே வசித்து வந்த அவர், தர்மாபுரம் பள்ளியில் வேலை செய்யும்போது லிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டு, பின் அவரைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்தே லிங்கம்-பழனியம்மாள் தம்பதிக்கு ஆதித்யா பிறந்திருக்கிறார். மகள் ஆனந்தவல்லி படித்து முடித்துவிட்டு, சென்னை ஐ.டி. நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராக பணியாற்றி வந்தார். இவரும், சென்னையில் பணி செய்யும் இடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். இந்த நிலையில் ஆனந்தவல்லி, பிரசவத்திற்காக தனது தாய் வீடான திருத்தங்கலுக்கு வந்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான், பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
முன்னதாக, லிங்கம்-பழனியம்மாள் தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டதால், அவர்களுக்கு லிங்கம் குடும்பத்தினர் தரப்பிலிருந்து எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. எனவே லிங்கம்- பழனியம்மாள் தம்பதியினர் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யும் பொருட்டு திருத்தங்கலில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். மேலும் தனிப்பட்ட தேவைகளுக்கும், பிள்ளைகளின் எதிர்கால தேவைக்களுக்காகவும் வெளிநபர்களிடம் லிங்கம் கடன் வாங்கியிருக்கிறார். சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களிடம் லிங்கம் கடன் வாங்கியதாக அடையாளம் காட்டப்படும் நிலையில், கடன் மட்டுமே சுமார் 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி தந்த நிலையில், லிங்கம் தனது பெற்றோரை நாடி `எனக்கு சேர வேண்டிய சொத்தினை எழுதி தந்தால், அதை விற்று எனது கடனை அடைத்து கொள்வேன்’ என கூறியிருக்கிறார்.
ஆனால் இதற்கு லிங்கத்தின் பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் லிங்கம் விரத்தியுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க, இன்று அனைவருக்கும் செட்டில்மென்ட் செய்வதாக லிங்கம் தெரிவித்திருக்கிறார். அதன்படி நேற்று காலை லிங்கத்தை தொடர்பு கொண்டவர்கள் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்திருக்கின்றனர். அதேசமயம் வீட்டிலிருந்து யாரும் வெளிவராத நிலையில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் லிங்கத்தின் வீட்டிற்குள் எட்டி பார்த்திருக்கின்றனர். அப்போது லிங்கம்-பழனியம்மாள் ஆகிய இருவருமே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது குறித்து தீயணைப்பு மீட்பு படையினருக்கும், திருத்தங்கல் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், லிங்கம் பழனியம்மாள் தம்பதியினர் மட்டுமல்லாமல், அவர்களின் மகள் ஆனந்தவல்லி, மகன் ஆதித்யா, இரண்டு மாத குழந்தை சஷ்டிகா உள்பட ஐந்து பேரும் இறந்துகிடப்பது தெரியவந்தது. இவர்களில் மகள் ஆனந்தவல்லி, ஆதித்யா, குழந்தை சஷ்டிகா ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பூச்சிமருந்து நாற்றத்துடன் இறந்து கிடந்துள்ளனர். ஆகவே கடன் தொல்லை தாங்காமல் பிள்ளைகளான ஆனந்தவல்லி, ஆதித்யா, பேத்தி சஷ்டிகா ஆகியோருக்கு விஷமருந்து கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, அதன் பிறகு லிங்கம், பழனியம்மாள் ஆகிய இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்
இதுதொடர்பாக குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஐவரின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தொடர்பாக லிங்கம் குடும்பத்தினர், பழனியம்மாள் குடும்பத்தினர், மற்றும் ஆனந்தவல்லியின் கணவர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர், உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.