சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ்(வயது 35) – ரம்யா(33).இருவரும் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி பிரபல ஐடி நிறுவனங்களில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்பதிக்கு மெதந்த்(5) என்ற மகனும், ஏழு மாதத்தில் பெண் கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமுல்லைவாயல் அப்பார்ட்மெண்டின் பால்கனியில் இருந்து 7 மாத கைக்குழந்தை தவறி விழுந்துள்ளது. பின்னர் அக்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
அன்று முதற்கொண்டு ரம்யா தீவிர மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் வெங்கடேஷ் ரம்யாவிற்கு ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக குழந்தைகளுடன் ரம்யாவின் சொந்த ஊரான காரமடைக்கு அழைத்து சென்றுள்ளார். காரமடை பெள்ளாதி சாலையில் உள்ள ரம்யாவின் தந்தையான வாசுதேவன் வீட்டில் தங்கி வெங்கடேஷ் ஒர்க் ப்ரம் ஹோம் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் தீவிரமான மன உளைச்சலில் இருந்து வந்த ரம்யாவிற்கு மன அழுத்தத்திலிருந்து வெளியே வர கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் ரம்யாவின் தந்தை வாசுதேவன்(67),தாய் புஷ்பா(60) உள்ளிட்ட இருவரும் ஒரு திருமண நிகழ்விற்கு நேற்று முன்தினம் சென்று விட கணவர் வெங்கடேஷ் படுக்கையறையில் உறங்கியுள்ளார். குழந்தைகளும் உறங்கி விட்ட நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்த ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.பின்னர்,படுக்கையில் இருந்து எழுந்து பார்த்த வெங்கடேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வீட்டின் மற்றொரு படுக்கை அறையில் ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில், இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்ட வெங்கடேஷ் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.