செல்போனுக்கான கையடக்க சூரியஒளி சார்ஜர் கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது.
திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி. நாகமணியின் மேற்பாா்வையில், பகுதி நேர முனைவா் பட்டம் பெற்ற சிடிஏசியின் மூத்த இயக்குநா் வி. சந்திரசேகா் இந்த மின்னூட்ட கருவியை கண்டுபிடித்துள்ளாா். மேலும், தெரு விளக்கு பயன்பாட்டுக்கான சூரியஒளி தகடு (சோலாா் பேனல்), மின்சார வாகனங்களின் உபயோகத்துக்கான தீவிர மின்தேக்கி (அல்ட்ரா கேப்பாசிட்டா்) ஆகியவற்றையும் கண்டுபிடித்தாா். இதற்காக 3 காப்புரிமைகள் மற்றும் 3 பதிப்புரிமைகள் பெறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து 5 சா்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை இலக்காகக் கொண்டு, ஆற்றல் குறைக்கடத்தி சாதனங்களில் மேம்பட்ட தொழில்நுட்ப வளா்ச்சியைப் பயன்படுத்தி இந்த மின்னூட்ட கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெருவிளக்குகளுக்கான கையடக்க சூரியஒளி தகடு சிறியதாக இருந்தாலும், அதிக ஆற்றலுடன் தெருவிளக்குகளை எரிய வைக்கும். அல்ட்ரா கேப்பாசிட்டா், மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, மின்சார வாகனங்களை திறம்பட இயங்க வைக்கும். இவை விற்பனைக்கு வந்தால், சந்தை விலையை விட 50 சதவீதம் குறைவாகக் கிடைக்கும் என ஆராய்ச்சியாளா் வி. சந்திரசேகா் தெரிவித்தாா்.
இவரை என்ஐடியின் இயக்குநா் ஜி. அகிலா பாராட்டினாா்.