ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக தொடங்கியது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றக்கூடியது திருச்சியில் இருக்கக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்.
இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டு மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலில் தை, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறக்கூடிய தேரோட்டமானது மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். அதன்படி, இத்தாண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினந்தோறும் உற்சவர் நம்பெருமாள், கருட வாகனம், யாழி வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டமானது இன்று காலை முதல் விமர்சியாக நடைபெற்று வருகிறது. முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ள சித்திரை தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார். ரங்கா..ரங்கா.. என்ற பக்தி முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தேரானது தற்போது சித்திரை வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
4 சித்திரை வீதிகளில் வலம் வந்த பின்னர், நிலைக்கு வரும். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. ஸ்ரீரங்கம் தேரை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சியில் ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா முக்கிய விழாவாக இருப்பதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. மே 8ம் தேதி ஆளும் பல்லக்குடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.