திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தைச் சோ்ந்தவா் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மன நலம் பாதிக்கப்பட்ட மகள் இருந்தாா். இவா், கை, கால்கள் செயலிழந்த நிலையில் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தாா். அவரது தாயாா் இறந்தபிறகு தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த 2021-ஆவது ஆண்டு அப்பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா்.
இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினா்கள் முசிறி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவரது தந்தையே 2020- ஆம் ஆண்டு டிசம்பா் 19 -ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
அடுத்த சில மாதங்களில் , அப்பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது.
மேலும் 5 மாதங்கள் கழித்து உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணும் உயிரிழந்தாா்.
இதுதொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் நேற்று தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிா் உசேன் ஆஜரானாா்.