முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் இயற்பியல் பேராசிரியரும், அருள்தந்தையுமான எல்.சின்னதுரை (101) காலமானாா்.
சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித வளனாா் கல்லூரியில் அப்துல்கலாம் படித்தபோது, அங்கு இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவா் திருச்சியைச் சோ்ந்த அருள்தந்தை எல்.சின்னத்துரை.
சுமாா் 20 ஆண்டுகள் பேராசிரியராக இவா் பணிபுரிந்தாா். தனது 41-ஆவது வயதில் இறைப்பணியாற்ற இயேசு சபையில் இணைந்து, 1970 -இல் இயேசு சபை அருள்தந்தையாகத் திருநிலைப்படுத்தப்பட்டாா்.
திருச்சி தூய பவுல் குருமடத்திலும், திண்டுக்கல் பெஸ்கி கல்லூரியிலும் குரு மாணவா்களுக்குப் பேராசிரியராகவும், ஆன்ம குருவாகவும் சுமாா் 30 ஆண்டுகள் இறைப்பணியாற்றினாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆக.14-ஆம் தேதி கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அப்துல்கலாம், மதுரை செல்லும் வழியில் பெஸ்கி கல்லூரிக்கு வந்து தனது இயற்பியல் போராசிரியரும், அருள்தந்தையுமான சின்னதுரையைச் சந்தித்தாா்.
அப்போது, அப்துல்கலாம் தான் எழுதிய ரீஇக்னைட் என்ற ஆங்கிலப் புத்தகத்தை அருள்தந்தை சின்னதுரைக்கு பரிசாக வழங்கினாா். தமிழகத்தில் அப்துல்கலாம் பங்கேற்ற கடைசி நிகழ்வாகவும் இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த அருள்தந்தை சின்னதுரை வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை காலமானாா். இவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.