போலி மதுவகைகள் விற்ற 4 நபர்கள் கைது. மற்றொரு வாலிபர் சிக்கினார்.
திருச்சியில் மனமகிழ் மன்றத்தில் விற்பனை செய்யப்பட்ட போலி மதுவகைகளை பறிமுதல் செய்து தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி.தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மனமகிழ் மன்றத்தில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய புலனாய்வு (சிஐயூ) பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட மனமகிழ் மன்றத்தில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடம் சென்று, மனமகிழ் மன்றத்தில் இருந்து 130 க்கும் மேற்பட்ட ஃபுல் பாட்டில்கள் மற்றும் லட்சக்காண ரூபாய் மதிப்புடைய ஏராளமான போலி மது வகைகளை ( பாட்டில்களை) பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மனமகிழ் மன்ற நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் என பிரகாஷ், சிலம்பரசன், சிவா, கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
காந்தி மார்க்கெட்டில் வாலிபர் கைது
இதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட் உப்பிலியர் தெரு பகுதியில் 24 மணி நேரமும் மது விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி, மது பாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வடக்கு தாராநல்லூரை சேர்ந்த ஜீவா என்ற வாலிபரை கைது செய்தனர்.
.