இன்று திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட நாடார் சமூகத்தினர் இல்லை என்று அகில இந்திய நாடார் மகாஜன சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடார் மகாஜன சபை கண்டன அறிக்கை
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை பரபரப்பாக தொடங்கி நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுற்றி வருகின்றன. கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தொகுதிகளை பங்கீடு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் இன்று திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய இடங்கள் போக மீதமுள்ள 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் 11 புதுமுகங்கள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்று அந்த சமுதாயத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுக சார்பில் 2024 மக்களவைத் தேர்தலில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஒரு நாடாருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்த நாடார் சமுதாய மக்கள் திமுகவிற்கு இதன் விளைவை உணர்த்துவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் கார்த்திகேயன் நாடார், மாநில பொதுச் செயலாளர் வைரவன் நாடார், மாநில பொருளாளர் ஜெயராமன் நாடார் ஆகியோர் பெயர்கள் அடங்கிய லெட்டர் பேடில் வெளியாகி உள்ள இந்த அறிக்கையில் மாநிலத் தலைவர் கார்த்திகேயன் கையெழுத்திட்டுள்ளார். இந்த அறிக்கை நாடார் மக்கள் மத்தியில் திமுகவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.