திருப்பூர், கே.வி.ஆர்., நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கார்த்திக்.இவர், 2022ம் ஆண்டில் மொபைல் போனில் வந்த கடன் செயலியில் பதிவிட்டு கடன் பெற்றார். அதைத் திருப்பிச் செலுத்திய பின்னரும் தொடர்ந்து அவரைப் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக்கின் முகத்தையும், அவரது நண்பர் ஒருவரின், 4 வயது மகளின் முகத்தையும் ஒட்டி ஆபாசமாக பதிவிட்டு மொபைல் போன்களில், கார்த்திக்கின் தொடர்பு வட்டத்தில் உள்ள எண்களுக்கும் இந்த பதிவு சிறுமியின் தந்தைக்கும் சென்றது.
அச்சிறுமியின் தந்தையும் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இதில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த அர்ஜூன்குமார், (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
திருப்பூர் அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைக்குப் பின் அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.