திருச்சி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20, 000 லஞ்சம் வாங்கியதாக திருவெறும்பூர் சப் ரிஜிஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 65). ரியல் எஸ்டேட் உரிமையாளர்.
இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் உள்ள காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாகவும், அதற்காக 1.3.2024 ஆம் தேதி திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள்.
இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் 27.2 2024 அன்று திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று அங்கிருந்த சார்பதிவாளர் சபரி ராஜன் என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார்.
அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரி ராஜன் ஒரு பத்திரத்திற்கு ரூ.10 ஆயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரிராஜன் (வயது 41), தனிநபர் சூர்யா (24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்ற போது கையும் காலமாக பிடித்தனர்.
சபரி ராஜனை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.