எத்தனை லட்சம் பேருக்கு என்றாலும் சரி தரமான அசைவ, சைவ உணவுக்கு கேரண்டி . சேலம் திமுக மாநாட்டில் கலக்கிய திருச்சி கே எம் எஸ் ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் பேட்டி.
கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், இரண்டரை லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி சமைத்துக் கொடுத்ததன் மூலம் தனி கவனம் ஈர்த்திருக்கிறார் திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம்.
திருச்சியில் கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி என்ற பெயரில் பல கிளைகளுடன் உணவகம் நடத்தி வருபவர் ஹக்கீம். இவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.
இதனிடையே திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிக்கப்பட்டதுமே சாப்பாடு விஷயம் குறித்து அமைச்சர் நேருவிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் நேருவின் முதல் சாய்ஸே திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் தான்.
”பாய் இருக்கிறார் பார்த்துக்கொள்வார், எந்த பிரச்சனையும் வராது” என உதயநிதியிடம் உறுதிக்கொடுத்தார் அமைச்சர் நேரு. தன் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய வாய்ப்பை அமைச்சர் நேரு கொடுத்ததால், அதில் சின்ன சலசலப்பு கூட வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த ஹக்கீம், மாநாட்டில் இரண்டரை லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி சமைப்பதற்காக 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் மாநாடு நடைபெறும் தேதிக்கு முன்னதாகவே ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கு தனது டீமை 3 ஆக பிரித்து பிரியாணி சமைக்க ஒரு டீமும், சிக்கன் 65, பிரட் ஹல்வா சமைக்க ஒரு டீமும், வெஜ் பிரியாணி, காலி பிளவர் சில்லிக்கு மற்றொரு டீமையும் களமிறக்கி சமையல் பணிகளை கவனித்துக்கொண்டார்.
இருப்பினும் கூட்டம் ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுங்கடங்காமல் வந்ததால், ஹக்கீமை போனில் அழைத்த அமைச்சர் நேரு, ”கூட்டம் நிறைய இருக்கு.. என்ன செய்யப் போற?” என வினவியிருக்கிறார். ஒன்றும் பதற்றம் அடைய வேண்டாம், பார்த்துக்கொள்ளலாம் என கூலாக பதிலளித்துவிட்டு உடனடியாக எம்.டி. பிரியாணியை 30,000 பேர் சாப்பிடும் வகையில் 1 மணி நேரத்தில் சமைத்துக் கொடுத்திருக்கிறார்.
அமைச்சர் நம்ம மேல டென்ஷன் ஆகி ஏதும் பேசி விடக் கூடாது என்பதால், அவர் சொன்ன அளவை விட கூடுதலாகவே சிக்கன் தயார் செய்து வைத்திருந்தேன் என்றும் இதனால் சிக்கன் 65 எவ்வளவு கேட்டாலும் கொடுக்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வளவு பெரிய மாநாட்டிற்கு தேவையான மட்டன் மற்றும் சிக்கன் ஆகியவற்றை நல்ல தாரமுடன் தேவையான அளவுக்கு மேல் வழங்கிய திருச்சி சுப்பிரமணியபுரம் கனி பிராய்லர்ஸ் உரிமையாளர் கனிக்கும் , தான் நினைத்தவாறு பணிகளை மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார் .
மாநாட்டில் சாப்பிட்ட அனைவரும் ஹக்கீம் ஹோட்டலில் சென்று சாப்பிட்டது போன்றே உணவு தரமாகவும் சுவையாகவும் இருந்தது என கூறி சென்றது குறிப்பிடத்தக்கது .