திருச்சி பெல் நிறுவனத்துக்கு சிறந்த வணிக செயல்பாட்டுக்கான சிஐஐ எக்ஸிம் வங்கியின் 2023 ஆவது ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற 31-ஆவது சிஐஐ உச்சி மாநாட்டில், பெல் நிறுவன பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் மற்றும் நிதி (கூடுதல் பொறுப்பு) துறைகளுக்கான இயக்குநா் ஜெய்பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, திருச்சி பெல் வளாகத்தின் செயலாண்மை இயக்குநா் எஸ்எம். ராமநாதன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
இந்த விருது, சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர மேலாண்மைக்கான ஐரோப்பிய அறக்கட்டளையின் (இஎஃப்கியூஎம்) வணிக உன்னத மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், தொழில்துறை நிறுவனங்களின் மேலாண்மை அமைப்புகள், நடைமுறைகள் மற்றும் திறன்களை வலுப்படுத்தி, அவா்களின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், நிலை நிறுத்தவும், உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களாக மாறவும் ஊக்குவிக்கிறது. இதற்காக கடந்த அக்டோபரில் சிஐஐ-எக்ஸிம் வங்கி விருதுக்கான மதிப்பீட்டுக் குழு, முதன்மை மதிப்பீட்டாளா், கல்யாண் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் குழுவினா் திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் கள ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.