திருச்சியில் 24 மணி நேரமும் இயங்கும் பார்கள்.கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம். பொதுமக்களுடன் இணைந்து போராட்டம். அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிக்கை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், 46வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும், அரசு நிர்ணயித்த கால அளவைத்தாண்டி, டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகிறது. அதிலும் சில பார்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது.
மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு இயந்திரங்கள், குறிப்பிட்ட கால அளவை தாண்டி இம்மி அளவு கூட வேலை செய்யாத பொழுது, மக்களின் குடியை கெடுக்கும் மதுபான கடைகள் மட்டும், எந்த விதிகளையும் பின்பற்றாமல் செயல்படுவது யாரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக?.
விடியற்காலைகளில் மதுபான பார்களை திறந்து வைப்பதற்கான அத்தியாவசியம் என்ன? யாருடைய அனுமதியுடன், நிர்பந்தத்தின் பேரில், வழிகாட்டின் படி இந்த பார்கள் இயங்கி வருகிறது., அதுவும் பணியாரம், அப்பளம், கொய்யா போன்ற தின்பண்டங்களுடன்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் பார்களை, அரசு நிர்ணயித்த கால அளவை தாண்டி இயங்கும் பார்களை உடனடியாக, நிரந்தரமாக மூட வேண்டும்.
அப்படி நடக்காத பட்சத்தில், பல ஏழை, வரிய குடும்பங்களை சிதைக்கும் இதே நிலை தொடர்ந்தால் பொதுமக்களுடன் இணைந்து அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
என ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள கூறியுள்ளார்.