
சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சின்ன வெங்காயம் வாங்குவதை பெரும்பாலோனோர் தவிர்த்து விடுகின்றனர்.
வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
சின்ன வெங்காயம் இல்லாமல் சமையலில் ருசியே இல்லை. சாம்பார், காரகுழம்பு, கூட்டு, பொரியல் என அனைத்திலும் ஒரு கைபிடி அளவு வெங்காயம் போட்டால்தான் சுவையே.
ஆனால் இன்றைக்கு சின்ன வெங்காயத்தின் விலையே உச்சத்தில் இருக்கிறது. கிலோ ரூ.100 கொடுத்து வாங்கி அதை வழக்கமான அளவில் பயன்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர்.
காய்கறி மார்க்கெட்டிற்கு போய் சின்ன வெங்காயத்தை வெறுமனே பார்த்து ஆசையாய் தடவி பார்த்து விட்டு மட்டுமே வரவேண்டியிருக்கிறது. சமையலில் வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தினால் சமூகம் பெரிய இடம் போல என்று மீம்ஸ் போடுகிறார்கள்.
கல் நெஞ்சக்காரர்களின் கண்களையும் குளமாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். சமையலில் வெங்காயம் பயன்படுத்தப்படுவது இன்றைய நேற்றைய விசயமில்லை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயத்தை பயிரிட்டு சமைத்து சாப்பிட்டு வந்திருக்கின்றனர். காரணம் அதன் நன்மைகள்தான். பண்டைய ரோம, கிரேக்க, எகிப்து, இந்திய, சுமேரிய,சீனர்கள் வெங்காயத்தை பயன்படுத்தியத்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
வெங்காயம் உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்துகின்றனர். பாட்டி வைத்தியத்தில் வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. தலைமுடியில் ஏற்படும் பிரச்சினைகளை வெங்காயம் தீர்க்கிறது.
வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், கந்தகம் கலந்துள்ளது. அல்லிசின் அல்லீன் ஆகியவை உள்ளன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும் பொழுதும் நறுக்கும் பொழுதும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. மேலும், ஃபிளேவனாய்டுகள், பினோலிக் அமிலம் மற்றும் ஸ்டிரால்கள் போன்றவை காணப்படுகின்றன.
சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தின் மகிமை அறிந்துதான் அனைவரும் சமையலில் உபயோகிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அது படிப்படியாக குறைந்து தப்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சத்தமில்லாமல் உயர்ந்திருக்கிறது சின்ன வெங்காயம். திருச்சி வெங்காய மார்க்கெட்டில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
திருச்சி காய்கறி சந்தைக்கு தினசரியும் 300 டன் வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயம் 100 டன் மட்டுமே வரத்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மட்டுமல்லாது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயத்தை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவில் மழை தீவிரமடைந்துள்ளது. பண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும். என்பதால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஆகஸ்ட் இறுதியில் இருந்து பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக உயரும். செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம். இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தது.
வெங்காய விளைச்சல் குறைந்து போனாலோ, சந்தைக்கு வரத்து மற்றும் மக்களின் தேவை போன்ற ஏற்றத்தாழ்வால் இந்த விலையேற்றம் ஏற்படும். சில்லறைச் சந்தையில் இது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைத்துள்ளது.
காரிஃப் பருவ வெங்காயம் அறுவடை தொடங்கிய பின்னர் காரிஃப் வெங்காயம் சந்தைக்கு வருவது அதிகரித்தால் வெங்காய விலை கட்டுப்பாட்டுக்கு வரும். அக்டோபர் – டிசம்பர் விழாக்காலத்தில் வெங்காய விலை நிலைத்தன்மை அடையும் என்று கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தி 29 மில்லியன் மெட்ரிக் டன் என்று கணக்கிடப்படுகிறது. இது கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தைக் கணக்கில் கொள்ளும்போது 7 சதவிகிதம் அதிகமாகும்.
வெங்காய விலை உயர வாய்ப்பு உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ள சில வாரங்களிலேயே பதுக்கலும் அதிகமாகி விட்டதாக தெரிகிறது. அதனால் வெளிச்சந்தைகளில் சில்லறை விலைகளில் வெங்காயத்தின் விலை உயரத்தொடங்கி விட்டது.
இதேபோல இஞ்சி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழ வைத்துள்ளது.

