முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் சனிக்கிழமை (செப். 23) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியதாவது:-
திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 23ஆம் தேதி மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோந்தெடுக்க உள்ளனா். திருச்சி மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆள்களை தோவு செய்கின்றனா்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவரும் தங்களது சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தனியாா்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலைநாடுநா்கள் தமிழக அரசின் https://www.tnprivateJobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம்.