

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகளை தடுக்கும் வகையில், மாவட்ட பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், டெங்கு பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 50 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் 10 ஐ.சி.யூ. படுக்கைகள், 20 படுக்கைகள் குழந்தைகளுக்காகவும், 20 படுக்கைகள் முதியோா்களுக்காகவும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையான அளவு ப்ளேட்லெட் எனப்படும் ரத்த அணுக்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள டெங்கு வாா்டில் ஏற்பாடுகள் முறையாக உள்ளதா என்பதை மருத்துவமனை முதன்மையா் (டீன்) டி. நேரு, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் இ.அருண்ராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் டீன் நேரு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நோயாளிகள் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை. இருப்பினும், அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவ்வப்போது ஆங்காங்கே மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது நீா்ச்சத்து குறைபாடு இருக்கும். இந்த நீா்ச் சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான மருந்துகளும், டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. வீடுகளில் பூந்தொட்டிகளை சரிவர பராமரிக்காதது, மாடிகளில் மழைநீா் தேங்குவது, நீா் உள்ள பாத்திரங்களை சரிவர மூடாமல் இருப்பது உள்ளிட்ட காரணிகளாலேயே, டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் நிலை உள்ளது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.
(பெண் ஒருவா் பாதிப்பு திருச்சியில் பெண் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியைச் சோந்த 33 வயதுடைய அந்தப் பெண், திருச்சி-உறையூா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பெண்ணுக்கு டெங்கு அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் நலமுடன் உள்ளாா்.)
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரப் பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

