எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் தொகுப்புரை ஆற்றினார். ஆண்டறிக்கையை மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வாசித்தார். மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை உரையாற்றினார், தேசிய பொதுச்செயலாளர் முகமது இல்யாஸ் தும்பே சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஏவல் நடவடிக்கையாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் உள்ளிட்டவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்தும்,
பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைபாடு கொண்ட கட்சிகள், சிறுபான்மை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை தனது கைப்பாவை அமைப்புகளான என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தி வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு எதிர்த்து நின்று குரல் கொடுக்க வேண்டும். தேசத்தின் ஜனநாயகத்தை காக்க வேண்டும்
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும்.
ஆட்சி மாற்றம் வரை காத்திருக்காமல் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும், மாநில கல்விக் கொள்கையை விரைவில் செயல்படுத்த வேண்டும், சிஏஜி அறிக்கை மூலம் ஒன்றிய அரசின் 7 திட்டங்களில் மட்டும் ரூ 7.50 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது வெளிப்பட்டுள்ளதால் சிஏஜி அறிக்கை குறித்து விசாரணை மேற்கொள்வதோடு, முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்.
முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 5% சதவீதமாக உயர்த்த வேண்டும், தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய தமிழக அரசு சச்சார் கமிட்டியை போன்றதொரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது நிறைவுரையாற்றினார்.
முன்னதாக மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரஃபீக் அகமது வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் அமீர் ஹம்சா நன்றி கூறினார்.