Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் திருச்சியில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா.

0

 

திருச்சியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் கூறியதாவது:

“திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு முன்னோடி இயற்கை விவசாயிகளும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்களும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். குறிப்பாக, இந்நிகழ்ச்சி விவசாயிகளை வெறும் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி தொழில்முனைவோராகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் விவசாயத்திற்காக பல்வேறு விருதுகளை வென்ற கேரளாவைச் சேர்ந்த முன்னோடி பெண் விவசாயி புவனேஸ்வரி, 120 நெல் ரகங்களை மீட்டெடுத்த தெலுங்கானா விவசாயி ஸ்ரீகாந்த், 5 ஏக்கர் நிலத்தில் 160 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்த கர்நாடகா விவசாயி பி.கே. தேவராவ், பிரபல பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆகியோர் நெல் விவசாயத்தில் லாபம் எடுக்கும் நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லி கொடுக்க உள்ளனர்.

அத்துடன் உணவு மருத்துவ நிபுணர் ஹீலர் சக்திவேல் யுவராஜ் அவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்து பேச உள்ளார். மேலும், பாரம்பரிய அரிசியில் 214 பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்யும் பெண் தொழில் முனைவர் மேனகா, மதிப்பு கூடுதல் துறையின் சாதனை புரிந்து வரும் தான்யாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் மணி ஆகியோர் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பேச உள்ளனர்.

இதுதவிர, முன்னோடி விவசாயிகள் பெரிய சாமி (கரூர்), செந்தில் குமார் (திருவாரூர்), விஜய் மகேஷ் (தஞ்சாவூர்), மஹாலட்சுமி (காஞ்சிபுரம்) உள்ளிட்டோர் தங்களுடைய வெற்றி அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இதில் இடம்பெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இத்திருவிழா ஜூலை 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.