திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.
திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அங்குள்ள வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலாளர் லட்சுமி தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான லட்சுமி தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக உரிமையாளர் செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.