திருச்சியில் பாதுகாப்பற்ற வகையில் இயங்கிய,
தனியார் தொடக்கப் பள்ளிக்கு சீல் வைப்பு.
திருச்சியில் பாதுகாப்பற்ற வகையில் இயங்கி வந்த தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை வருவாய் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு ஊராட்சியில், தனியார் மழையலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில், கோயில் சுற்றுச்சுவருடன் சேர்த்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட நிலையில் பள்ளி கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது. பள்ளி கூரைக்குமேல் மரக்கிளைகளும் இருந்தன. மேலும் சாலையோரம் மற்றும் கோயில் மதில்சுவருக்கு இடைப்பட்ட பகுதியில் மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் அப்பள்ளி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கவிருந்த நிலையில், மீண்டும் பள்ளி நிர்வாகத்துக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. நிலையான கான்கிரீட் கூரையுடன் பாதுகாப்பான வகையில் கட்டடம் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் எனவும், இல்லையேல் நிகழாண்டு அங்கீகாரம் புதுப்பிக்கப்பட மாட்டாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனாலும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
தகவலறிந்த கல்வித்துறையினர், கடந்த ஜூன் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் மாற்று ஏற்பாடு செய்வதாக பள்ளி நிர்வாகத்தினர் உறுதியளித்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி வரை பொறுத்துப் பார்த்த கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதை அடுத்து 10 ஆம் தேதி முதல் பள்ளி தொடர்ந்து செயல்பட தடைவிதித்து, மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் சந்திகரேசகரன் உத்தரவிட்டார். இந்நிலையில், மேலும் ஒருவாரம் பள்ளி நிர்வாகம் அவகாசம் கேட்டு அவகாசமும் வழங்கப்பட்டிருந்ததாம். என்றாலும் குறைபாடுகளை சீராக்க நேற்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து கல்வித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று மாலை, அப்பள்ளியை மூடி சீல் வைத்தனர்.
குறிப்பிட்ட இந்த பள்ளிக்கு நிலையான கட்டடமோ, பாதுகாப்பு அம்சங்களோ இல்லாத நிலையில், காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பள்ளி செயல்பட தடையின்மை சான்றுகள் வழங்கியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் விணணப்பித்து பள்ளி நிர்வாகம் அங்கிகாரத்தை புதுப்பித்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த விவரங்கள் தெரியவந்ததையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது என நடவடிக்கை எடுத்து பள்ளியை பூட்டி சீல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அளுந்தூர் பகுதியில் இயங்கி வந்த 3 பள்ளிகள், நீர் நிலை புறம்போக்கு இடத்தில் இயங்கி வந்ததையடுத்து கடந்த 11 ஆம் தேதி, இதேபோல பூட்டி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.