
இளம் பெண் தூக்கு மாட்டி தற்கொலை
தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஓமந்தூர் சமத்துவபுரம் காலனி கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36). இவருக்கும் ஜெயக்கொடி (வயது35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணமான புதிதில் சந்தோசமாக அவர்களின் வாழ்க்கை பயணம் சென்றது. இதற்கிடையே ராஜேஷிற்கு மதுப்பழக்கம் தொற்றிக் கொண்டது. இதையடுத்து அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியுடன் சண்டை போடத் தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து ஜெயக்கொடி கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும் அவர் திருந்துவதாக இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயக்கொடி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புலிவலம் போலீசார் தற்கொலை செய்வதற்கு தூண்டியதாக அவரது கணவர் ராஜேஷ் மீது 306 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

