திருவெறும்பூர் செங்குளம், பொழுது போக்கு
அம்சங்களுடன் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் பொதுமக்களின் 12 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அங்குள்ள செங்குளத்தை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பகுதியில் திருச்சி மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 41 ல் செங்குளம் என்ற பெயரில், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 2011 ஆவது ஆண்டு, திருச்சி மாநகராட்சியுடன் இப்பகுதி சேர்க்கப்பட்டது. என்றாலும், இக்குளம் அமைந்துள்ள பகுதியில் பொது பூங்கா அமைக்க வேண்டும், குளத்தையும் தூர்வாரி பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் சுமார் 12 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் நீண்ட கால கோரிக்கை திருச்சி மாநகராட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. செங்குளம் அருகே புதிய பொதுப்போக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கவும், விளையாட்டு உபகரணங்களுடன் குளக்கரையை தரம் உயர்த்தி மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு தொடர்புடைய பணிகள் தொடங்கியுள்ளன.
இதேபோல செங்குளத்துடன் 3 ஆவது மண்டலத்தில் உள்ள மற்றொரு குளக்கரையும் பலப்படுத்தப்பட்டு, நடைபயிற்சி செல்லும் வகையில் நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது.
திருவெறும்பூர் கிழக்கு பகுதிகளில் உள்ள நிலங்கள் செங்குளத்திலிருந்து பாசன வசதி பெறுகிறது என்பதால், அதன் நீர் சேமிப்பு திறன் பாதிக்காத வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த கட்ட பணியின்போது குளத்தில் உள்ள வண்டல் மண் அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், அதாவது 3 மாதங்களுக்குள் குளத்தில் நடந்துவரும் தொடர்புடைய பணிகள் முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.