கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம்,ஆற்றில் மூழ்கி இறந்த பாடசாலை மாணவர்களுக்கு ரூ.2 லட்சமா?
திருச்சி, ஸ்ரீரங்கத்தில், ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் என்ற வேத பாடசாலையில் கோடைகால பயிற்சிக்கு வந்த, ஈரோடு மாவட்டம், நசியனுாரை சேர்ந்த கோபாலாகிருஷ்ணன் (வயது17), திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை விஷ்ணுபிரசாத் (வயது13), ஹரிபிரசாத் (வயது14), மற்றும் ஆந்திரா மாநிலம், குண்டூரை சேர்ந்த தாய்சூரிய வெங்கட் (வயது14) ஆகியோர், ஸ்ரீரங்கம், யாத்ரி நிவாஸ் அருகில் கடந்த, 14ம் தேதி அதிகாலை, கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அதிகாலை நேரத்தில், ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றது தெரியாததால், தண்ணீரில் மூழ்கினர். அவர்களில், கோபாலகிருஷ்ணன் மட்டும், அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார்.
மற்ற, மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இதில், விஷ்ணுபிரசாத் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. இரண்டு நாள் தேடுதலுக்கு பின், அபிராம், ஹரிபிரசாத் உடல்கள் மீட்கப்பட்டன.வேத பாடசாலை மாணவர் மூன்று பேரின் இறப்புக்கு, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு குறித்து முறையான எச்சரிக்கை இல்லாததே காரணம்.
எனவே, கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு, அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும், என்று எழுந்துள்ளது.இது குறித்து சமூகநல ஆர்வலர்கள், ஸ்ரீரங்கம் நகர்நலச் சங்கத்தினர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் ஆகியோர் கூறியதாவது:
மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போதும், காவிரி ஆற்றில் அதிகமான தண்ணீர் வரும் போதும், திருச்சி, முக்கொம்பு மேலணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். அப்போது, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை வாயிலாக, கரையோர மக்களுக்கு, முறையான எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்படும்.மற்ற நேரங்களில், கொள்ளிடத்தில், தண்ணீர் திறப்பு பெருமளவு இருக்காது.
தற்போது, காவிரி ஆற்றில், கம்பரசம்பேட்டை அருகே கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடப்பதால், கடந்த சில நாட்களுக்கு முன், காவிரியில் வந்த, 1,903 கனஅடி நீர், அப்படியே திறக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் திறப்பு குறித்து, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடவில்லை.
கொள்ளிடம் ஆற்றில், திடீரென அதிக தண்ணீர் வரத்ததால், யாத்ரி நிவாஸ் அருகே, கூடுதல் தண்ணீர் திறப்பை அறியாத பள்ளி மாணவர்கள், ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில், தண்ணீர் திறப்பு குறித்து முறையான அறிவிப்பு, குளிக்கும் இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு வைத்திருந்ததால், இந்த சம்பவம் நடந்திருக்காது.
அதனால், இந்த சம்பவத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே முக்கிய காரணம். எனவே, ஆற்றில் மூழ்கி இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு, அரசு தரப்பில் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக்கொம்பிலிருந்து முன் அறிவிப்பு ஏதும் இன்றி அணை திறந்து கொள்ளிடத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்த பிராமண மாணவர்களுக்கான நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய் பம்மல். ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை, தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களின் ஜாதி, மதம் பார்த்து நிவாரண உதவி வழங்கும் முதல்வர் செயல்பாட்டில் பாரபட்சமாக உள்ளதாக தெரிகிறது. இறந்த வேதசாலைபாட மாணவர்கள் ஏழைகுடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆன்மிக பணிக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள் அவர்கள் குடும்பத்திற்கு வேறு வருமானம் இருக்க போவதில்லை , எனவே அவர்களுக்கு குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.