Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

0

'- Advertisement -

 

வரலாறு காணாத கூட்டம். சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.பல லட்சம் பக்தர்கள் திரண்டனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி, பேரூராட்சி தலைவர் ஜி.பி. சரவணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, கோவில் மின்னொளியில் ஜொலித்தது.
தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே சமயபுரம் வந்து குவிந்து இருந்தனர்.

முன்னதாக தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி கடும் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்தில் புனித நீராடி, அங்கிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று கோவிலுக்கு முன்புறமும், தீபம் ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலை வலம் வந்த அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தெப்பகுளம், சமயபுரம் சந்தைகேட் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை தொடர்ந்து நாளை (19-ந்தேதி) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.