செல்போனில் பேசியதை தாத்தா
கண்டித்ததால்
பிளஸ் 2 மாணவி திடீர் மாயம்.
திருச்சி பொன்மலை கணேசபுரம் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி மல்லிகா (வயது 33). இந்த தம்பதியரின் மகள் தானேஸ்வரி (வயது 17).இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
விரைவில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் அந்த மாணவி எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். மேலும் ஒரு இளைஞரிடம் அவர் செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தார். இதை பார்த்த அவரது தாத்தா பேத்தியை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற தானேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மல்லிகா பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போனில் பேசிய இளைஞருடன் சென்று விட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றுள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.