காதல் திருமணம் செய்த இளம் பெண் குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை.
திருமணமான ஒரு வருடத்தில் பரிதாபம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர்ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் என்கிற தினேஷ். இவருக்கும் திருச்சி கூனி பஜார் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகள் சகாயமேரி ஸ்டெபி
( வயது 23 ) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர் திருமணத்திற்கு பின் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் அவரது கணவர் குடித்துவிட்டு மனைவியின் மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு சகாயமேரி தனது தாய் செல்வியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு கணவர் தன்னை துன்புறுத்துவதாக கவலை தெரிவித்தார்.
உடனே செல்வி மருமகன் வீட்டுக்குச் சென்றார். பின்னர் மகளிடம் பொறுமையாக இரு என கூறிவிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சகாய மேரி திடீரென சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.இது தொடர்பாக அவரது தாய் செல்வி கண்டோன்மென்ட்
அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.