திருச்சி விமான நிலையத்தில் :
ரூ.45.57 லட்சம் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ, 45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை இருவரிடமிருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் வழக்கமாக மேற்கொள்ளும் சோதனைகளுக்கு உள்படுத்தினர். இதில் பெண் பயணியொருவர், அவரது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 21 லட்சத்துக்கான 2000 மற்றும் 500 (இந்திய) பணத்தாள்களை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றுக்கான உரிமம் ஏதும் பெறப்படவில்லை.
அதேபோல திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமான பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, ஆண் பயணி ஒருவர் ரூ.24.57 லட்சம் மதிப்பிலான (3000) அமெரிக்க டாலர்களை மறைத்து கொண்டு செல்லவிருந்தது தெரியவந்தது. இவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.