Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான பாரம்பரிய சிலம்ப போட்டிகள் நடைபெற்றது.

0

 

 

திருச்சியில் மாநில அளவிலான பாரம்பரிய சிலம்ப போட்டிகள் நேற்று நடைபெற்றன.

தமிழர்களின் மரபு வழி பாரம்பரிய சிலம்ப கலையை பிரபலப்படுத்தவும், அதை வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில்,  மருத்துவர் ஜெயபால் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.ப.விஸ்வநாதன் பள்ளி உள் அரங்கில் நடைபெற்றது.

போட்டிகளை திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் தொடங்கி வைத்தார். உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிலம்ப வீராங்கனை சுகித்தா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இருந்து சுமார் 800 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், வீராங்கனையர் போட்டியில் பங்கேற்றனர்.

குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடு கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு, வீரர்களின் ஒழுக்கம், வேகம், ஸ்டைல், ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில்  கொண்டு மதிப்பெண் வழங்கி பரிசுகள் வழங்கப்பட்டன.

மழலையர், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களது ஆற்றல்மிகு சிலம்பத் திறனை சக போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் வீரர், வீராங்கனையருக்கு சுழற் கோப்பைகள், பதக்கங்கள்  மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 3 வயது சிறுவன் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அது மட்டுமின்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரின் இரு புதல்வர்களான பிரஜன் மினி சப்ஜூனியர் பிரிவிலும், மித்ரன் மினி கேடட் பிரிவிலும் பங்கேற்று சிலம்பம் விளையாடி பரிசுகளை தட்டிச்சென்றனர்.

நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பைகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்களை திருச்சி, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழங்கினார். திருச்சி மத்திய சிறைச்சாலை மேலாளர் திருமுருகன், தேசிய கல்லூரி பேராசிரியர் முனைவர் மாணிக்கம், உலக சிலம்ப இளையோர் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், தொழிலதிபர் கார்த்திக்,  உலக சிலம்ப இளையோர் சங்க செயலாளர் மோகன், பொருளாளர் எஸ். மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.