திருச்சி அருகே
மாதம் ரூ. 10 லட்சம் மாமூல் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல்
3 பேர் மீது வழக்கு.
திருச்சி அருகே நாவலூர் கொட்டப்பட்டு பகுதியில் சமீபத்தில் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது. இதன் மேலாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பரமேஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து அவரிடம் மாதந்தோறும் திறந்தவெளி திரையரங்க உரிமையாளரிடம் ரூ. 10 லட்சம் மாமுல் வாங்கி தர வேண்டும். இல்லையென்றால் உன்னை தொலைத்து விடுவோம் என கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக ரமேஷ் திரையரங்க பங்குதாரர் டாக்டர் ஹரிஷ் குமாரிடம் தெரிவித்தார். உடனே அவர் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் பேரில் மாமூல் கேட்டு தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல் விடுத்த நாவலூர் கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன், போஸ்கோ என்கிற வாண்டையார்,
மகேந்திரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.