தமிழக முதல்வரின் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக திருவள்ளுவரில் இருந்து தமிழக முதல்வர் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 பெறுவதற்கு டெபிட் கார்டு ( Debit Card) 1730 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கினார். இதில் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் நித்தியா உள்ளிட்ட அதிகாரிகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரதீப் குமார்: இதுவரை 1,730 மாணவிகளுக்கு வங்கி டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மராமத்து பணிகள் நடைபெற்று வரும் காவிரி பாலம் இன்னும் 15 நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், திருச்சியில் இதுவரை பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.