முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்ட மரக்கன்றுகள்.அனைத்து செலவும் வீண்.திருச்சி 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன்.

முதல்வர் வருகையை ஒட்டி சாலைப்பணிகளின் போது
அகற்றப்பட்ட மரக்கன்றுகள்.
திருச்சி மாநகராட்சியில், தமிழக முதல்வர் வருகைக்காக மேற்கொள்ளப்பட்ட சாலைப்பணிகளின் போது அண்ணா விளையாட்டரங்கம் அருகே சாலையோரம் நடப்பட்டிருந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அகற்றப்பட்டன. இது குறித்து புகார் தெரிவித்த பின்னரும் மரக்கன்றுகள் நடுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார். மாநகராட்சி 47 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட காஜாமலை, அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்டரங்கு மற்றும் மேடையில், அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் தமிழக அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை ஒட்டி முதல்வர் வருகைக்காக திருச்சி மாநகர் அழகுபடுத்தப்பட்டது. பாலங்கள், சாலை மையத் தடுப்புகள் வர்ணம் பூசப்பட்டன. முதல்வர் செல்லும் வழியில் உள்ள சாலைகள் போர்க்கால நடவடிக்கையில் செப்பனிடப்பட்டு மேம்படுத்தப்பட்டன.
அந்த வகையில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் விமான நிலையத்திலிருந்து விளையாட்டரங்கம் வரும் வழியில் கொட்டப்பட்டு பகுதியில், அகதிகள் முகாம் மற்றும் கால்நடை மருத்துவத்துறை துணை இயக்குநர் அலுவலகம் (பழைய கோழிப்பண்ணை) இடையே உள்ள சாலையும் அவசர கதியில் புதுப்பிக்கப்பட்டது. குண்டும் குழியுமாக இருந்த சாலை சீரமைக்கப்பட்டது இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிதான். என்றாலும் சாலைப்பணிகள் முற்றிலும் முடிந்த பின்னரே, ஏற்கெனவே அந்தப் பகுதியில் சாலையோரம் நடவு செய்யப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
முதல் வருகைக்காக சாலை அமைத்தது சரி, ஆனால் அதற்காக நடப்பட்டு சில மாதங்களான நிலையில் சுமார் 4 முதல் 5 அடி உயரம் வரை வளர்ந்திருந்த மரக்கன்றுகளை அகற்றுவது முறையா ? என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து 47 ஆவது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பதில் அளித்து சுமார் ஒரு வாரகாலம் கடந்த நிலையிலும் இது நாள் வரையில் அந்த பகுதிகளில் மரக்கன்று நடவு செய்தற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மரம் வளர்ப்பை ஊக்குவித்து வரும் மாநகராட்சியே, மரகன்றுகளை அகற்றம் செய்திருப்பது தவறு. சுமார் 30 மரக்கன்றுகள் நடவு செய்தது, அதற்கான கூண்டுகள் செய்தது, பராமரிப்பு செலவு என அனைத்தும் வீண் என்கிறார் அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன்.

