துறையூரில்
மதுவுக்கு அடிமையான பெண் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி துறையூர் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவி தமிழரசி (வயது 57).
இந்த தம்பதியருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் கஸ்தூரி உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார்.
அதன்பின்னர் தமிழரசி தனது மனம் போன போக்கில் வாழத் தொடங்கியுள்ளார்.
தினமும் கூலி வேலைக்கு சென்று வந்த அவரிடம் சிறிதளவு பணம் சேர்ந்தது. அதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து வட்டித் தொகையை வாங்கி மது குடிக்க தொடங்கியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தமிழரசி மதுவுக்கு அடிமையாகி விட்டார்.
கணவரை இழந்த நிலையில் அங்குள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
தமிழரசியின் மதுப்பழக்கம் அவரது தாயாருக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. இதனால் மகளை கண்டித்தார்.
இருந்தபோதிலும் அவரால் மதுவை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் குடிபோதையில் தாய் மற்றும் குடும்பத்தினரிடம் தகராறு செய்த தமிழரசி திடீரென அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். உறவினர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக கவலையை மறப்பதற்காக ஆண்கள் தான் மது அருந்துவதாக சொல்வார்கள். ஆனால் இங்கு ஒரு விதவைப் பெண்மணி மதுவுக்கு அடிமையாகி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.