Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உதயநிதியால் கவுன்சிலர் கூட ஆக முடியாது. திருச்சி பொது கூட்டத்தில் முன்னாள் எம்பி குமார்.

0

'- Advertisement -

 

திருச்சி அரியமங்கலத்தில் எம்ஜிஆரின் 16வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ப.குமார் தலைமையேற்று பேசிய போது:

அம்மா மறைகின்ற போது இந்த இயக்கம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இயக்கமாக, 37 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இருந்தது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கத்தால் பயனடைந்தவர்கள், இந்த இயக்கத்தைக் கூறுபோட வேண்டுமென நினைத்தார்கள். இந்த இயக்கமே இருக்கக் கூடாது எனவும் நினைத்தார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் 2021 பொதுத்தேர்தல் சமயத்தில் என்னென்ன இடையூறுகளைச் செய்தார் தெரியுமா?

அதையும் தாண்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 75 சட்டமன்ற உறுப்பினர்களை நாம் பெற்றோம். எப்படியாவது நம்முடைய இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அதற்கு உறுதுணையாக வைத்தியலிங்கம் உட்பட நான்கு பேர் இருக்கிறார்கள். தி.மு.க-வின் ‘பி’ டீமாக ஓ.பி.எஸ் இருக்கிறார். அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றபோது, நம்முடைய தலைமைக்கழகத்தை உடைத்து அங்கிருந்த பொருள்களை எடுத்துச் சென்றார் ஓ.பி.எஸ். சாமி கும்பிடுபவர்கள் யாராவது கோயிலை உடைப்பார்களா ?

ஓ.பன்னீர்செல்வம் ஒரு டீக்கடையின் உரிமையாளராக இருந்தவர். ஆனால், இன்றைக்கு கணக்கில் அடங்காத அளவுக்கு சொத்து சேர்த்திருப்பது, நம்முடைய இயக்கத்தைப் பயன்படுத்திதான் என்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு தொண்டர்கள் சப்போர்ட் இல்லை. நிர்வாகிகள் சப்போர்ட் இல்லை. நீ ஒரு நல்ல தலைவன் கிடையாது. யார் நினைத்தாலும் அ.தி.மு.க எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க முடியாது. எப்போதும் எம்.ஜி.ஆர், அம்மாவின் ஆவி நம்மை வழிநடத்தும்.

திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மக்களுக்காக ஆட்சி செய்வதற்கு மாறாக, தன்னுடைய குடும்பத்துக்கு வேண்டியதையெல்லாம் ஸ்டாலின் செய்கிறார். அவருடைய தகப்பனார் கருணாநிதிக்கு மெரினாவில் 89 கோடி ரூபாயில் பேனா வைக்கிறார். விளையாட்டுப் பிள்ளையாக இருக்கின்ற அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டுத்துறை அமைச்சராக்கியிருக்கிறார். தி.மு.க ஆட்சி போய்விட்டால் உதயநிதி ஸ்டாலினால் தேர்தலில் போட்டியிட்டு ஒரு கவுன்சிலராகக்கூட ஆக முடியாது. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் வரும். அதில் அ.தி.மு.க மாபெரும் வெற்றியைப் பெறும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராவணன், பகுதி செயலாளர் பாஸ்கரன்,பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, வட்ட செயலாளர் ஆர் பி ஜி கணேசன்,முன்னாள் கவுன்சிலர் இன்ஜினியர் ராஜா மற்றும் திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.