லால்குடி குழந்தை விற்பனை வழக்கில் வக்கீல் உட்பட மேலும் 4 பேர் சிக்கினர்
பரபரப்பு தகவல்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). லால்குடி அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் (பிரபு 42) வக்கீல். இவரது 2-வது மனைவி சண்முகவள்ளி (வயது38).
வக்கீல் பிரபுவின் அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ளது.
இங்கு அடிக்கடி ஜானகி வந்து சென்றதன் மூலம் பிரபுவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஜானகி திருமணம் ஆகாமலேயே முறையற்ற உறவால் கர்ப்பம் தரித்தார். அதை தொடர்ந்து 7 மாத கர்ப்பிணியாக இருந்த ஜானகி கருவை கலைப்பதற்காக பிரபுவின் உதவியை நாடினார்.
ஆனால் 7 மாத கர்ப்பத்தை கலைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என கருதிய அவர்கள் கூட்டாக சேர்ந்து அந்த குழந்தையை விற்று விட முடிவு செய்தனர். அதன் பின்னர் ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து பிரபு அந்த குழந்தையை ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஜானகியிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறி அவருக்கு ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஜானகி நகைகளை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்.
இதற்கிடையே குழந்தையை ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு பிரபு விற்பனை செய்தது ஜானகிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தை விற்கப்பட்ட தகவலை போலீசாரிடம் மறைத்துவிட்டு குழந்தையை பிரபுவுடன் கொடுத்ததாகவும், அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாகவும் போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக லால்குடி துணை போலி சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை நடத்தினார்.
பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் ஜானகியின் விருப்பத்தின் பேரில் குழந்தையை பிரபு அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் சேர்ந்து ரூ. 3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் ஜானகி குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் அம்பலமானது.
இதை தொடர்ந்து பெற்ற குழந்தையை விற்பனை செய்த ஜானகியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வக்கீல் பிரபு, அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி, பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இதில் வக்கீல் மீது குழந்தை கடத்தல், சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த குழந்தையை வக்கீல் பிரபு திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் விற்பனை செய்த தகவலும் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து கவிதாவையும் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். கவிதாவும் புரோக்கராக செயல்பட்டு வேறு ஒருவருக்கு அந்த குழந்தையை விற்பனை செய்ததாக தெரிகிறது.
ஆகவே இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. குழந்தை எங்கு இருக்கிறது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் ஆறு சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இன்று பிரபு , சண்முகவள்ளி பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ,உறையூர் கவிதா ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.